இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சைனைட் குப்பிகள்!
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சைனைட் எனப்படும் விசக் குப்பிகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில்ல மேலும் தெரியவருகையில்,
இலங்கையிலிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து அங்கிருந்து சுமார் 500 விசக் குப்பிகள் மற்றும் நச்சு மருந்துகளை இலங்கைக்கு கடத்த முயன்ற போது ராமநாதபுரம் க்யூ பிரிவு காவல்துறையினர் உச்சிப்புளியில் வைத்து கிருஷ்ணகுமார், சசிகுமார், ராஜேந்திரன், சுபாஸ்கரன் ஆகியோரை கைது செய்தனர்.
இதில் தப்பி ஓடிய குமரன் என்ற உதயகுமார் கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் 4 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இவர் மீது இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தது போலியான பெயரில் நிரந்தர வருமான வரி கணக்கு எண் துவக்கியது, மற்றும் ஆதார் அட்டைகளை வாங்கியது, என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.