சீனாவுக்கு எதிராக இலங்கையைத் திசைதிருப்ப அமெரிக்கா போடும் இரகசிய திட்டம்!
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக இந்திய ஊடகத்தை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை இந்திய கடற்பரப்பினை கண்காணிப்பதற்கு இரண்டு விமானங்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும், 4000 தொன் எடையுடைய மிதக்கும் கண்காணிப்பு கட்டமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படை உறவுகளுக்காக விசேட அதிகாரி ஒருவரை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையும் இந்தியாவும் முதல் தடவையாக இவ்வாறு மூன்று பாதுகாப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், மாலைதீவு, சிங்கப்பூர், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனும் இவ்வாறு இந்தியா உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.
க்வாட் எனப்படும் இந்த பாதுகாப்பு உடன்படிக்கை பற்றிய விபரங்களை இலங்கை அரசாங்கம் இதுவரையில் அம்பலப்படுத்தவில்லை.
இந்தியா ஊடாக அமெரிக்கா பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கையில் முன்னெடுக்கும் ஓர் முயற்சியாக இதனை கருத வேண்டுமென உயர்மட்டத் தகவல்கள் தெரிவிப்பதாக ஞாயிறு சிங்கள இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவிற்கு எதிராகவே இந்த பாதுகாப்பு நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
