முதல்முறையாக ஆட்சிப் பீடம் ஏறியுள்ள ஸ்டாலினுக்கு ஸ்ரீலங்கா அமைச்சரின் வாத்துச் செய்தி!
ஈழத் தமிழ் மக்களின் நன்றிக் கடனுக்கு உரித்தான தமிழக மக்கள் நீடித்த மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழும் நீதி ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ள மு.க.ஸ்ராலினுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஸ்ரீலங்கா கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
காலம் ஒரு செங்கோலை எம் கையில் தரும். இது மறைந்தும் மறையாத தமிழகத்தின் ஔிச் சூரியன் கலைஞரின் இலட்சிய நம்பிக்கை. ஓய்ந்தறியா உங்கள் உழைப்பால் தமிழகத்தில் மறுபடியும் தி.மு.க. ஆட்சி மலர்ந்து கலைஞரின் கனவு நிறைவேறியுள்ளது. தமிழக மக்களின் மனங்களில் மட்டுமன்றி, அவர்களின் கனவுகளை வெல்லும் ஆட்சிப் பீடத்திலும் உங்களுக்கு சிம்மாசனம் கிடைத்துள்ளது.
ஈழத் தமிழர்களின் நீதியான உரிமைப் போராட்ட காலத்தில் அரசியல் ஏதிலிகளாக தமிழகம் வந்த எமது மக்களை அன்பால் அரவணைத்து வரவேற்றவர்கள் தமிழக மக்கள். எமது நன்றிக் கடனுக்கு உரித்தான தமிழகம் நீடித்த மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழும் நீதி ஆட்சி மறுபடியும் மலர வேண்டும்.
சமன் செய்து சீர்தூக்கும் செங்கோல் ஆட்சியென அது நிலவ வேண்டும். எமதும், உங்களதும், தமிழக மக்களினதும் ஆழ்மன விருப்பங்களே இன்று நிறைவேறியிருக்கின்றது. முதல்முறையாக ஆட்சிப் பீடமேறும் உங்களுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்' என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.