தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பல இலட்சம் தரவுகள் மாயம்!
ஸ்ரீலங்காவின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் களஞ்சியத்திலிருந்து தரவுகள் காணாமல் போயுள்ளமை குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட செயற்பாடா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. ஸ்ரீலங்காவின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தரவு களஞ்சியத்திலிருந்து சுமார் 11 லட்சம் தரவுகள் காணாமல் போயுள்ளன.
இந்த தரவுகள் காணாமல் போன சம்பவம் குறித்து, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இணையவழியாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருமளவான தரவுகளே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை வசம் மேலதிக தரவுகள் இல்லாமையினால், இது மிகப் பெரிய பிரச்சினை என நாட்டின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 ஆம் ஆண்டு முதல் தனியார் நிறுவனம் ஒன்றுடனான உடன்படிக்கை மூலம் இந்த தரவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும், இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் இதனுடன் தொடர்புபட்டு இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
எனினும், இந்த பிரச்சினை காரணமாக நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாது என தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.