சிறிலங்காவை சர்வதேச விசாரணைகளுக்கு பரிந்துரைக்க பிரயத்தனம்
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்கு பரிந்துரைப்பது உட்பட்ட உறுதியான நடவடிக்கைகளை தொழிற்கட்சி முன்னெடுத்து வருவதாக பிரித்தானியா நிழல்வெளியுறவு அமைசசர் லிசா நந்தி (Lisa Nandy) குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டின் பின்னணியில் சென் கந்தையா தலைமையில் இடம்பெற்ற தொழிற்கட்சிக்கான தமிழர் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இந்த மாநாட்டில் ஆசிய பிராந்திய நிழல் அமைச்சர், ஸ்ரிபன் கின்னொக் உட்பட மூத்த தொழிற்கட்சி உறுப்பினர்களும் முன்னாள் பிபிசி ஊடக செய்தியாளர் மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான திட்ட ஒருங்கிணைப்பாளர், பிரான்சிஸ் ஹரிசன் உட்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பிரித்தானிய அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான நகர்வுகள் போதாது என்ற விமர்சனம் தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கெடுத்த தொழிற்கட்சி பிரபலங்களால் முன்வைக்கபட்டிருந்தது.
அந்த வகையில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை பரிந்துரைப்பது போன்ற, உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக பிரித்தானிய நிழல் வெளிவிவகார அமைச்சர் லிசா நந்தி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு வழக்குகளைப் பரிந்துரைப்பது போன்ற உறுதியான நடவடிக்கைகளை சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா தீர்மானத்தில் இணைக்க வேண்டுமென, மார்ச் மாதத்தில் தாம் வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஒருங்கிணைந்த படிமுறைகள் மிகவும் முக்கியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல இந்த நிகழ்வில் உரையாற்றிய, ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் ஸ்டீபன் கின்னொக் உறுதியான நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியதோடு,
தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிலர், இலங்கைக்கு வெளியே இருப்பார்கள். அவர்களை கைது செய்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் அடிப்படைகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தவறியதையும், அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு சபையில் சிறிலங்காவை பாதுகாக்கும் வகையில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம், வீட்டோ எனப்படும் வெட்டுரிமை வாக்கு இருப்பதை வைத்து பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கப்பட வேண்டுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.