ஹிட்லர் முசோலினி போன்று ஆட்சியமைக்க முற்படும் ராஜபக்ஷக்கள்!
கடுமையான சட்டங்கள் ஊடாக இலங்கையை ஹிட்லர் மற்றும் முசோலினியின் ஆட்சியைப் போல் முன்னெடுக்கவே தற்போதைய ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.
எனவே பயங்கரவாத தடைசட்டம் போன்றவை நீக்கப்பட வேண்டும் என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த ஜூன் 18 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சரான அரச தலைவர் கோட்டாய ராஜபக்ஷ, அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் அலி சப்ரி ஆகியோரால் பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான கூட்டு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இது தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
ஸ்ரீலங்காவில் சிவில் உரிமைகள் மீறப்படல், பயங்கரவாத தடைசட்டம் அரசாங்கத்தால் முறைகேடாக பயன்படுத்தப்படல் என்வற்றை மேற்கோள் காட்டி ஸ்ரீலங்காவிற்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிசலுகையை நீக்குவதற்கான யோசனை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னரே இவர்களுக்கு பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தோன்றியுள்ளது. இவ்வாறான நிலையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாட்டின் பிரஜையொருவர் சிந்தித்தால் கூட அவருக்கு தண்டனை வழங்கப்படக் கூடிய நிலைமையை தோற்றுவித்துள்ளது.
ஹிட்லர் ஆட்சியிலேயே இவ்வாறான கடும் சட்டங்கள் காணப்பட்டன. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறி ஆட்சியை கைப்பற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யுத்தத்ததின் போது இல்லாத சட்டங்களைக் கூட தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி அதிகூடிய அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொண்ட அரசியல்வாதி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஆவார்.
ஆனால் அதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு இது வரையில் அவர் எடுத்துள்ள புதிய முயற்சிகள் என்ன? தாக்குதல் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ளமையால் பேராயர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த அமர்வின் போது ரிஷாத் பதியுதீன் தொடர்பில் கேள்வி எழுப்பிய பின்னர் தான் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்படுமா? இவ்வாறு அரசியல் தேவைகளுக்காக தண்டனை வழங்கும் செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.