கோட்டாபய மஹிந்தவிடம் விடுக்கப்பட்டுள்ள நிபந்தனை!
ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு அமைய தான் தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தன்னிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். தனது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதற்கு முன்னதாக, நாடாளுமன்றில் ஒரு பிரியாவிடை உரையாற்றவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர், வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் இடத்திற்கு தகுதியான நபரை பரிந்துரைக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கப்ராலிடம் கோரிய போதிலும், அதனை அவர் மறுத்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு மீண்டும் மத்திய வங்கி ஆளுநர் பதவியை பொறுப்பேற்க தயாராகிவரும் அஜித் நிவாட் கப்ரால், அரசாங்கத்திடம் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, தான் மத்திய வங்கி ஆளுநர் பதவியை பொறுப்பேற்க வேண்டுமாயின், “அமைச்சர்” ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து சிறப்புரிமைகளும் தனக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். சீனா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள மத்திய வங்கி ஆளுநர்களுக்கு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்றுள்ள மிலிந்த மொரகொடவும் தனக்கு அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென கேட்டிருந்தார்.
இதற்கமைய, வரலாற்றில் முதன்முறையாக அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் அதிகாரத்தை மிலிந்த மொரகொடவிற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.