சர்வதேச கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் மற்றுமொரு பாரிய முற்றுகை!
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் வைத்து பாரிய தொகையிலான போதைப்பொருளுடன் மற்றுமொரு படகு சிறிலங்காக் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
படகில் பயணித்த 09 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதோடு கடந்த ஒரு மாதத்தில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட மூன்றாவது படகு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிலங்கை கடற்பிரதேசத்தில் வைத்து இன்றைய தினம் பெருந்தொகையான போதைப்பொருளுடன் மீன்பிடிப் படகொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. சிறிலங்கா காவல்துறைக்கு கிடைத்த உளவுத் தகவலைத் தொடர்ந்து கடற்படையினருடன் ஆழ்கடலில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமாக பயணித்துக் கொண்டிருந்த படகு முற்றுகையிடப்பட்டது.
அதில் பயணித்த வெளிநாட்டவர்கள் 09 பேரிடம் நடத்திய விசாரணையில், பாரியளவு போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது குறித்த படகு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்தப் படகிலிருந்து சுமார் 170 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காக் கடற்படையின் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
குறித்த ஹெரோயினின் பெறுமதி ஆயிரத்து 575 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.