ரணிலுக்கு கைமாறும் சம்பந்தனின் நாடாளுமன்ற ஆசனம்!
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனின் ஆசனம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இரா.சம்பந்தனுக்கு மற்றுமொரு இடத்தில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். அவருக்கு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அருகே உள்ள 16ஆம் இலக்க ஆசனம், ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும் ஆசனத்தை மாற்றுவது குறித்து ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற அலுவல்கள் பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பிவைத்திருப்பதாக அறியமுடிகின்றது. அந்தக் கோரிக்கைக்கு அமைய, ரணில் விக்கிரமசிங்கவுக்கு 13ஆம் இலக்க ஆசனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே 13ஆம் இலக்க ஆசனம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனிற்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரணில் விக்கிரசிங்கவுக்காக ஒதுக்கப்பட்ட 16ஆம் இலக்க ஆசனம் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.