ஸ்ரீலங்காவில் முடக்கல் நிலை தளர்த்தப்பட்ட பிரதேசங்களை மீண்டும் முடக்குமாறு மக்கள் வேண்டுகோள்!
ஸ்ரீலங்காவில் தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களை விட அதிகளவானோர் சமூகத்தில் இருக்கக் கூடும் என்பதால் எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்கு நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000ஐ கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் காமினி லொக்குகேவின் அரசியல் தலையீட்டில் தன்மைப்படுத்தலில் இருந்த பிரதேசம் திறக்கப்பட்ட போதிலும் மீண்டும் தனிமைப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றின் வேகம் மூன்றாம் கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில் நாளாந்தம் பாதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் எதிர்வரும் வாரங்களில் அநாவசிய பயணங்களைக் குறைத்து அபாய நிலைமையை உணர்ந்து, சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கோவிட் ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சரான மருத்துவர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறில்லை என்றால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். தற்போது நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பெருமளவான தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களை விட அதிகமானோர் சமூகத்தில் இருக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கொழும்பின் புறநகராகிய பிலியந்தல பிரதேசம் அண்மையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து அமைச்சரும் பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான காமினி லொக்குகேவின் அரசியல் தலையீட்டினை தொடர்ந்து அந்தப் பகுதி மீண்டும் திறக்கப்பட்டது.
குறித்த பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதோடு கொழும்பு மாவட்டம் பிலியந்தலை காவல்துறை பிரிவில் 05 பிரதேசங்கள் இன்றுமுதல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
எனினும் அரசியல் தலையீட்டினைத் தொடர்ந்து திறக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள், தங்களது பிரதேசத்தை மீண்டும் தனிமைப்படுத்துமாறு அங்கு சென்ற பொதுசுகாதார பரிசோதகர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.