மகளை கண்டுபிடித்து தாருங்கள்! 150 அடி மின் கோபுரத்தில் ஏறி தந்தை உண்ணாவிரதம் (படம்)
ஒரு வாரமாக காணாமல் போயுள்ள தனது 15 வயது மகளை கண்டுபிடித்து தருமாறு கலேவல குடாவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த மின் கோபுரத்தில் ஏறி தந்தை ஒருவர் நேற்றுமுதல் (24) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கூலி தொழிலாளியான ஜகத் மகேந்திர லயனல் என்ற நபர் கல்கிரியாகம காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
இந்த நபர் நேற்று மதியம் கலேவல குடாவெவ பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள சுமார் 150 அடி உயரமான மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தேடும் நடவடிக்கைகள்
அதனையடுத்து அந்த இடத்திற்கு சென்ற கல்கிரியாகம காவல்துறையினர், இன்றைய தினத்திற்குள் மகளை தேடி தருவதாக கூறிய போதிலும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மகளின் தந்தை கூறியுள்ளார்.
மகளை காணவில்லை என்று முறைப்பாடு கிடைத்தில் இருந்து காணாமல் போன சிறுமியை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிரியாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
