ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் : ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதி தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையெனவும் இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை எட்டாத நிலையில் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு தேர்தவுக்காக அநுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டனர்.
நாட்டின் தேர்தல் விதிகளின்படி, வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியாக வெற்றிபெற மொத்த வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு தேர்விற்கு நகர்ந்துள்ளது.
முன்னிலை வகிக்கும் இரண்டு வேட்பாளர்கள்
எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையை பெறாத நிலையில் முன்னிலை வகிக்கும் முதல் இரண்டு வேட்பாளர்களான அநுர மற்றும் சஜித்தை தவிர்த்து ஏனைய வேட்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சீட்டிலிருந்து இரண்டாவது விருப்பத்தேர்வுகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு முதல் இரு வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும்.
இரண்டாம் விருப்பு வாக்களிப்பில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும், தேர்தல் அலுவலர்கள் இந்த செயன்முறையை கையாள்வதில் முழுமையாக பயிற்சி பெற்றுள்ளதாக ரத்நாயக்க பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
மேலும் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணும் பட்சத்தில், மாவட்டம் ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் இறுதி முடிவுகள் இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு, வெற்றியாளரின் அறிவிப்பு இன்று (22) பிற்பகல் அல்லது நாளை (23) முற்பகல் வரை தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான வாக்கு எண்ணிக்கை இடைவெளி குறைவடைந்து வருகிறது.
ஜனாதிபதித் தேர்தல்
இந்தநிலையில், வாக்குகள் 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற வேண்டும்.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |