இந்திய பாதுகாப்பு விவகாரம்! ராஜ்நாத் சிங்கிடம் அநுர வழங்கிய விசேட செய்தி
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலான வரலாற்று உறவுகளை மேலும் மேம்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்காகவும் இலங்கையின் நிலப்பரப்பு ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இச்சந்திப்பின்போது ஒரு கருத்தை வெளியிட்டார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலை மீட்பாளர்
தித்வா புயலின்போது 'சாகர் பந்து நடவடிக்கை'யின் கீழ் இந்தியா வழங்கிய மனிதாபிமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகளுக்கு இலங்கை ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர், மிக நெருங்கிய அண்டை நாடாகவும் நண்பராகவும் ஒரு முதல்நிலை மீட்பாளராக ஆதரவளிப்பது தனது பொறுப்பு என்று கருதுவதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறே தொடர்ந்து செய்வேன் என்றும் கூறியுள்ளார் என்றும் அறிக்கை கூறியுள்ளது.
இரு நாடுகளின் தலைவர்களின் ஆதரவின் கீழ், இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் இலங்கை விமானப்படையின் எல்70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளை நவீனமயமாக்குவதற்கான ஒப்பந்தம் மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரிகள் மற்றும் தேசிய மாணவர் படைக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டன.
மேலும், இந்திய பாதுகாப்புப் படைகளால் கட்டப்பட்ட மூன்று பெய்லி பாலங்களும் அடையாளப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |