10 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்த பிரிட்டிஷ் எயார்வேஸ்
பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கான விமான சேவையை பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதன் முதலாவது விமானம் இன்று (24.10.2026) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து BA2045 என்ற விமான இலக்கத்துடன் பயணித்த போயிங் 777-200ER ரக விமானமே இவ்வாறு கொழும்பை வந்தடைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
இதன்படி, லண்டன் கேட்விக் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை முன்னெடுக்க பிரிட்டிஷ் எயார்வேஸ் திட்டமிட்டுள்ளது.

இந்தச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இலங்கையின் முக்கிய சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ஒன்றாக ஐக்கிய இராச்சியம் விளங்குகிறது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், சுற்றுலா, வணிகப் பயணங்கள் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவும் இந்த விமான சேவை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் ஹேலீஸ் குழுமத்தின் துணை நிறுவனமான அட்வான்டிஸ் ஏவியேஷன் சர்வீசஸ், பிரிட்டிஷ் எயார்வேஸின் இலங்கைக்கான பொது விற்பனை முகவராகச் (GSA) செயற்படவுள்ளது.
பிரிட்டிஷ் எயார்வேஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தக் கொழும்பு விமான சேவை குளிர்கால விமான அட்டவணையின் கீழ் பருவகால சேவையாக முன்னெடுக்கப்படும். இந்தச் சேவையில் பொருளாதார வகுப்பு, பிரீமியம் பொருளாதார வகுப்பு மற்றும் வணிக வகுப்பு ஆகிய பயண வசதிகள் வழங்கப்படவுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |