ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை விவகாரம்- ஸ்ரீலங்கா அரசியலமைப்பு மக்களின் உரிமை; மாற்றம் ஏற்படுத்த முடியாது!
ஸ்ரீலங்கா அரசியலமைப்பு ஸ்ரீலங்கா மக்களின் உரிமை எனவும், ஏதோ ஒரு நிறுவனத்தின் அல்லது அமைப்பின் கோரிக்கையை ஏற்று அதில் மாற்றம் ஏற்படுத்த முடியாது எனவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்த நியாயமான காரணங்களை புரிந்துகொள்கின்ற அதேவேளை, ஸ்ரீலங்கா மக்களின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என ஸ்ரீலங்கா ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தடைசெய்யும் வகையிலான பிரேரணையை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில், அது விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து இன்றைய தினம் ஸ்ரீலங்கா அரசாங்க தகவல் திணைகளத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக அரசியல் அமைப்பில் மாற்றம் மேற்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை முக்கியமாக ஆடைத் தொழிலுடன் தொடர்புடையது, குறிப்பாக இலங்கை பொருட்களின் ஏற்றுமதியுடன் தொடர்புடையது. ஜி.எஸ்.பி பிளஸைப் பொருத்த வரை சில விடயங்களில் நேரடியான தொடர்புகள் காணப்படும் விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த முடியும்.
எடுத்துக்காட்டாக, ஆடைத் தொழிற்சாலைகள் ஏதேனும் தொழிலாளர் சட்டங்களை மீறுகின்ற எனின், அல்லது ஆடைகளின் உற்பத்தித் தரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தரத்திற்கு ஏற்றதாக இல்லாவிட்டால், இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கரிசனைகள் நியாயப்படுத்தப்பட்டு புரிந்து கொள்ளப்படலாம்.
ஆனால், இலங்கை குடிமக்களின் உரிமையான நாட்டின் அரசியலமைப்பை மாற்றுமாறு கோரும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டுவருவதற்கு ஒரு தனி நிறுவனம் அல்லது ஒரு சர்வதேச அமைப்பின் எந்தவொரு நியாயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நிச்சியமாக ஏதோ ஒரு திட்டமிட்ட செயலாகவே இதனை பார்க்கின்றேன். குடிமக்களின் உரிமைகள் மற்றும் இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்கும் அதேவேளையில் ஸ்ரீலங்கா வெளிவிகார அமைச்சு இந்த விடயத்தை கையாளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.