ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்- வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு கோரும் ஸ்ரீலங்கா!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் மாதத்திற்கான கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்து தமது ஆதரவை கோரி வருகின்றது.
அந்த வகையில் ஸ்ரீலங்காவிற்கான ஈரான் துாதுவரை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இலங்கைக்கு கடந்த காலங்களில் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேம்பட்ட இருதரப்பு வர்த்தகம் முதலீடு சுற்றுலா மற்றும் ஆற்றல் உள்ளடங்கலான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ள புதிய துறைகளில் ஈரானுடனான அதிகரித்த பொருளாதார ஒத்துழைப்பை ஸ்ரீலங்கா வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடியுள்ளார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் ஹாஷேம் அஷ்ஜஸாதே வெளிநாட்டு அமைச்சில் நேற்றைய தினம் சந்தித்த போதே அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இதன் போது இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் எடுத்துரைத்தார்.
அண்மைய ஆண்டுகளில் உயர்மட்ட விஜயங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் இருதரப்பு மட்டத்திலும் சர்வதேச அரங்கிலும் நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கு இருதரப்பு உறவுகள் பங்களித்தன. ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் மற்றும் ஏனைய பல்தரப்பட்ட அரங்குகளில் ஈரான் ஸ்ரீலங்காவிற்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஈரான் அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை அவர் பாராட்டியுள்ளார்.