சிறிலங்கா தொடர்பில் அமெரிக்க நிறுவனத்தின் பகிரங்க அறிவித்தல் - வெளிவந்த அறிக்கை
சிறிலங்கா அரசாங்கத்துடன் கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் New Fortress நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு அப்பாலுள்ள கடலில் இயற்கை திரவ வாயு முனையம் ஒன்றை நிர்மாணித்தல், கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் வரை குழாய் கட்டமைப்பை அமைத்தல் ஆகியன ஒப்பந்தத்தில் அடங்குவதாக அமெரிக்க நிறுவனம் இன்று பகிரங்கப்படுத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் ஏற்கனவே 310 மெகாவாட் கொள்ளளவை கொண்டிருப்பதுடன், 2023 ஆம் ஆண்டளவில் மேலதிகமாக 700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என நம்புவதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரி தகவல்களுக்கு அமைய, கால எல்லையுடனான உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என அறியக்கிடைத்ததாகவும் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெளிவூட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.