இலங்கையில் கொரோனா தடுப்பூசிகளை பெறாதவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்
இலங்கையில் தற்போது, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாதவர்கள் என சுகாதார சேவைகள் (பொது சுகாதாரம்) பணிப்பாளர் சிறப்பு மருத்துவ நிபுணர் சுசி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் மூன்று கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது பரவி வரும் ஒமிக்ரோன் உருமாறிய வைரஸ் திரிபு மிகவும் வீரியமானது. எனினும் கடுமையாக நோய் அறிகுறிகள் தென்படாது. தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்றும் வாய்ப்புகள் அதிகம்.
மூன்று தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாதவர்களே தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் இறந்தும் போகலாம்.
தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் தப்பியுள்ளனர். இவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றினாலும் பாதிப்பு ஏற்படாது. அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுங்கள். பொய்யான நிலைப்பாடுகளுக்கு சிக்கிக்கொள்ளாதீர்கள் என்றார்.
