இலங்கையில் மோசமான காலநிலை - 14 பேர் உயிரிழப்பு
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக பத்து மாவட்டங்களில் பதினான்கு பேர் இறந்துள்ளதுடன், 60, 674 குடும்பங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா, இரத்னபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவர எலிய, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களின் போது இரண்டு பேர் காயமடைந்தனர் என்றும் இருவரை காணவில்லை எனவும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 817 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. 3,520 குடும்பங்களைச் சேர்ந்த 15,658 பேர் 72 பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இறப்புக்களை பொறுத்தவரையில் கம்பஹாவில் -2, இரத்னபுரியில் -3, கொழும்பில் - 1, புத்தளத்தில் -1, களுத்துறையில் -1, கேகாலையில் -5 மற்றும் காலியில் -1 என்ற எண்ணிக்கையில் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.