ஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பல்- மன்னிப்பு கோரிய அதிகாரி!
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீப்பற்றியெரிந்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஸ்ரீலங்காவிடம் மன்னனிப்புக் கோரியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் கடற்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையிலேயே சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்தமையால் ஸ்ரீலங்காவிற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, எக்ஸ்-ப்ரஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷ்மியுல் யோஸ் கொவிட்ஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் 1486 கொள்கலன்களுடன் பயணித்த குறித்த கப்பல், தீப்பற்றியது. இந்த தீயை கட்டுப்படுத்த 13 நாட்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை தற்போது 70 அடி ஆழத்தில் கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையிலேயே இந்த சம்பவம் குறித்து தாம் பெரிதும் வருத்தமடைந்திருப்பதாகவும் இதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தம் காரணமாக ஸ்ரீலங்காவின் கடற்சூழலுக்கும், மக்களது வாழ்வாதாரத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை பெரும் வருத்தமளிக்கிறது. தற்போதைய நிலைமைகள் குறித்து கண்காணிப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த கப்பலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சுத்திகரிப்பதற்காக அதிபார கருவிகளை ஸ்ரீலங்காவிற்கு வழங்கி, ஸ்ரீலங்கா அதிகாரிகளுடன் ஒத்துழைத்து செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.