நாடு திரும்பும் இலங்கை ஏதிலிகள் கைதுசெய்யப்படும் விவகாரம் : தமிழ் எம்.பி கோரிக்கை
இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை ஏதிலிகளை கைதுசெய்வதை விடுத்து அவர்கள் குறித்து ஒரு பொறிமுறையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (20) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தங்களுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு அதிலும் குறிப்பாக இந்தியாவிற்கு ஏதிலிகளாக சென்றவர்கள் நீண்ட காலத்திற்கு முன்னர் சென்றவர்கள் இந்தியாவில் உள்ள ஏதிலிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டு தற்போது தமது சுயவிருப்பின் பேரில் இங்கு பலர் வந்துகொண்டிருக்கின்றனர்.
யுத்தம் நடைபெற்ற காலத்திலும் கூட இந்தியாவில் இருந்து தமது சுயவிருப்பின் பேரில் தங்களுடைய பூர்வீக நிலங்களுக்கு திரும்பிய ஏதிலிகள் ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகளுக்கான நிறுவனத்தின் அனுசரணையுடன் இங்கு வந்திருக்கின்றார்கள்.
அவர்கள் வந்து இங்கு குடியேற முற்பட்ட போது பல பிரச்சினைகளை சந்தித்தார்கள். அவர்களுடைய நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய சொந்த நிலத்திற்கு போகமுடியவில்லை.
30 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு வந்தவர்களுக்கு தொழில் இல்லை, இந்தியாவிலே படித்துவிட்டு வந்த அவர்களுடைய பிள்ளைகளுக்கு இங்கு வேலைவாய்ப்பில்லை. தொழில் செய்வதற்கான எந்த முதலீடும் வழங்கப்படவில்லை.
அவர்கள் இந்திய அரசினால் கொடுக்கப்பட்ட உதவிகளையும், ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகளுக்கான நிறுவனம் கொடுத்த 25,000 ரூபாவை வைத்து ஒரு சில மாதங்கள் இலங்கையில் தங்கிவிட்டு இங்கு வாழ முடியாத சூழலிலே மீண்டும் அகதிகளாக தோணிகளில் இந்தியாவிற்கு போயிருக்கின்ற வரலாறு உண்டு.
ஆனால் இப்போது யுத்தம் முடிந்து 16 ஆணடுகள் கடந்துள்ள நிலையில் சுயவிருப்பின் பேரில் இங்கு வந்தவர்களை இப்போது கைது செய்வது ஒரு பாரிய பிரச்சினையாக உருவாகியிருக்கின்றது.
இது தொடர்பில் ஒரு சில நாட்களுக்கு முதல் ஜனாதிபதியுடன் பேசிய போது, விடயத்திற்கு சம்மந்தமான அமைச்சருக்கு இது பற்றி அறிவிப்பதாகவும் அவர்களுடன் பேசும்படியும் சொன்னார்.
குறிப்பாக எமது நாட்டிற்கு திரும்பி வந்த யாழ்ப்பாணத்திலே 06.08.2025, 28.08.2025 பலாலி விமா நிலையத்திலும் 12.08.2025 கட்டுநாயக்க விமான நிலையத்திலும் 30 வருடங்களுக்கு மேல் இந்தியாவில் இருந்த இந்திய அரசாங்கத்தினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், இலங்கையின் துணைத்தூதுவராலயத்தில் கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டவர்கள் ஐ.நாவின் உதவியோடு வந்தவர்கள் சட்டவிரோதமாக 35 வருடங்களுக்கு முதல் நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்படுகின்றனர்.
எதற்காக இந்தக் கைதுகள் நடைபெறுகின்றது. யுத்த காலத்தில் கூட இந்தக் கைதுகள் நடக்கவில்லை. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இவ்வாறு நடக்கின்றது என்றால் ஏதாவது உள்நோக்கம் இருக்கின்றது என நான் கருதுகின்றேன்.
இந்த நாட்டுக்கு கொண்டு வரப்படுபவர்களை பாதுகாப்பதும் அவர்களை கண்ணியமாக நடத்துவதும் இந்த அரசாங்கத்தினுடைய பொறுப்பு. மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை கைதுகளில் இருந்தும் சட்டநடவடிக்கைகளில் இருந்தும் விலக்கி விடுமாறு கோருகின்றேன்.
அவர்களை கைது செய்வது ஒரு மனிதாபிமானமற்ற செயல். ஆகவே அரசாங்கம் ஒரு பொறிமுறையினை உருவாக்க வேண்டும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
