கடவுச்சீட்டு மற்றும் விசா விவகாரம் - பொது பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு
வெளிநாட்டு கடவுச்சீட்டு டெண்டர் மற்றும் VFS வீசா சம்பவங்கள் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிய கணக்காய்வு நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்த மாதத்தில் அவசர தேவைகளுக்கு தவிர கடவுச்சீட்டு பெற வருவதை தவிர்க்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
இதேவேளை, இணைய வழியின் ஊடாக திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதற்கான அமைப்பை தயார் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் (Department of Immigration and Emigration) தெரிவித்துள்ளது.
அத்துடன், வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 'பி' பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, இந்த தொகைக்கு மேலதிகமாக, நவம்பர் மாத இறுதிக்குள் சுமார் 100,000 கடவுச்சீட்டுகளும், டிசம்பரில் 150,000 கடவுச்சீட்டுகளும் மொத்தமாக 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பெறப்படும் என தெரிவித்துள்ளது. மற்றொரு தொகுதி கடவுச்சீட்டு வாங்கும் பணியும் தொடங்கியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.