இந்தியத் தூதுவருடன் என்ன பேசினீர்கள்? தொடர்ந்தும் ‘பழைய குருடி’ கதைதானா!
தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக அமோக ஆதரவுடன் தெரிவாகியுள்ள சிவஞானம் சிறீதரன் புதிய இந்தியத் தூதருடன் சந்திப்பை மேற்கொண்டதாகப் புகைப்படங்கள் மற்றும் செய்தி வெளியாகியிருந்தது.
இந்தச் சந்திப்பின் போது, ஈழத்தமிழர்களது அரசியல் நலன்சார் விடயங்கள் மற்றும் சமகால நெருக்கடிகள் உள்ளிட்ட பலநிலைப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் அரசியல் தலைவர்களின் உத்தியோபூர்வச் சந்திப்புக்கள் என்பது வெறுமனே குடும்ப நிகழ்வுகள் அல்ல. மக்களின் நலன்சார்ந்த சந்திப்புக்கள்.
அந்தச் சந்திப்புக்களில் பேசப்படுகின்ற விடயங்கள் அந்தத் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களுக்கு கூறப்படவேண்டும்.
குறைந்தது அந்தக் கட்சியில் உள்ள ஒருசிலருக்காவது பரிமாறப்படவேண்டும்.
சிறீதரன் இந்தியத் தூதர் சந்திப்பு என்பது ஒரு முக்கியமான காலகட்டத்தில் நடைபெற்ற சந்திப்பு.
தமிழ் மக்களின் பிரதிநிதியாக, முக்கிய ஒரு தமிழ் தரைவராக அவர்கள் மேற்கொண்ட சந்திப்பின் போது தமிழ் மக்களின் என்னென்ன பிரச்சினைகள் பேசப்பட்டன என்பது மக்கள் அறிந்தேயாகவேண்டிய விடயங்கள்.
- தமிழ் மக்களின் வழிபாட்டிடங்கள் திட்டமிட்டு கையகப்படுத்தப்பட்டுவருகின்ற விடயங்கள் பேசப்பட்டனவா?
- தொல்பொருள் திணைக்களங்கள் மேற்கொண்டுவருகின்ற அடாவடித்தனங்கள் பேசப்பட்டனவா?
- தொல்பொருள் திணைக்களங்களுக்கும், பௌத்த சின்னங்களை அமைப்பதெற்கென்றும் அந்திய அரசாங்கத்தினால் பௌத்த பேரினவாதிகள் ஊக்கப்படுத்தப்பட்டுவருவது பற்றி பேசப்பட்டதா?
- இந்தியா வழங்கிய 13வது திருத்தச் சட்டம் தேவையற்றது என்று கூறி அதற்கு எதிராக நிலைப்பாடு எடுத்துவருகின்ற ஜே.வி.பியை அழைத்த இந்தியா அவர்களுடன் என்ன பேசியது என்ற விடயங்களும் அங்கு பரிமாறப்பட்டதா?
- நடைபெற இருக்கின்ற அதிபர்த் தேர்தலுக்கு தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று ஏதாவது உங்களுக்கு கூறப்பட்டதா?
- கச்சத்தீவை இந்தியா கையகப்படுத்துவது தொடர்பாக ஈழத்தமிழ் மக்களின் கரிசனையை நீங்கள் இந்தியத் தூதரிடம் வெளிப்படுத்தினீர்களா?
நீங்கள் மக்கள் பிரதிநிதியாக ஒரு வெளிநாட்டுத் தூதுவரைச் சந்தித்து மக்கள் பிரச்சினையைப் பேசியதாக அறிக்கை வெளியிட்டீர்கள் என்றால், மக்கள் சார்பாக என்ன பேசினீகள், உங்களுக்கு என்ன பதில் வழங்கப்பட்டது என்பனவற்றையும் நீங்கள் மக்களுக்குக் கூறக் கடமைப்பட்டுள்ளீர்கள்.
ஒரு நல்ல தலைவனுக்கு அதுதான் அழகு. அதுதான் தலைமைத்துவப் பண்பும் கூட..
சில வருடங்களுக்கு முன்னர் சுமந்திரன் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்த காலகட்டங்களில் இப்படித்தான் புகைப்படங்கள் வெளியிடப்படும்.
இன்னார் இன்னாருடன் சுமந்திரன் பேசப்போகின்றார் என்பதும் யாருக்கும் தெரியாது. என்ன பேசினார் என்றும் கட்சியிலுள்ள யாருக்கும் தெரியாது. பேசி பேசி என்ன நடந்தது என்றும் யாருக்கும் தெரியாது.
வெறுமனே வெளிநாட்டுப் பிரமுகர்களுடன் இரகசியங்களை மாத்திரம் பேசி யாரும் இங்கு எதுவும் வெட்டிக் கிழிக்கவுமில்லை. இனி வெட்டிக் கிழிக்கப்போவதும் இல்லை.
விடயங்களை மக்கள்மயப்படுத்துங்கள். மக்களை அரசியல்மயப்படுத்துங்கள்.
இராஜதந்திர விடயங்களைக் கையாழுவதற்கு துறைசார் வல்லுனர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து ஆலோசனை பெறுங்கள். வெளிநாட்டுப் பிரமுகர்களுடன் பேசிய விடயங்களை அந்த ஆலோசகர்களிடம் பரிமாறி, அலசி ஆராயுங்கள்.
தமிழ் மக்கள் சார்பாக ஒரு துரும்பு அசைவதாக இருந்தால்கூட அது தமிழ் மக்களின் நன்மை கருதித்தான் அசையவேண்டும்.
அப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்குங்கள். ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குங்கள்.
தமிழ் மக்கள் தானாகவே உங்கள் பின்னால் அணி திரழ்வார்கள்.