இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் உச்சம் தொட்ட முரண்பாடு :அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலக சிறீதரன் மறுப்பு
அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் நிலையில் அரசியலமைப்புப் பேரவையில் இருந்து விலகுமாறு கட்சி அறிவித்த போதிலும் தான் அந்த பேரவையிலிருந்து விலகப் போவதில்லை என, இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரசியல் குழுக் கூட்டத்தில் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசு கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நேற்று(24) மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 8.30 மணி வரை இடம்பெற்றுள்ளது.
பதவி விலகமாட்டேன்
அரசியலமைப்பு பேரவையில் இருந்து தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரனை அரசியல் குழுவின் கடந்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில், நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் அதனை வலியுறுத்தினர்.எனினும் அதற்கு சிறீதரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் பதவி குறித்து தானே முடிவெடுப்பேன் என்றும், அது தன்னுடைய சுயாதீன முடிவு என்றும், பதவி விலகமாட்டேன் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளதுடன், தான் எந்தத் தவறும் இழைக்கவேயில்லை என்றும் வாதிட்டுள்ளார்.அத்துடன் தம்மை பதவி விலக உத்தரவிடுவதற்கு அரசியல் குழுவிற்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உறுதிப்படுத்திய சுமந்திரன்
இந்த இழுபறிகளினால், நேற்றைய கூட்டத்தின் முடிவில் ஊடகச் சந்திப்பு எதுவும் நடத்தப்படவில்லை. இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன் அரசியல் குழுவின் பணிப்பை ஏற்க மறுத்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதுதொடர்பாக தீர்க்கமான முடிவை எடுத்திருப்பதாகவும், அது பற்றி உரியநேரத்தில் அறிவிப்போம் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |