இலங்கை இந்திய எல்லை விவகாரம்! மோடியை கடுமையாக விமர்சிக்கும் ஸ்டாலின்
இந்திய கடற்தொழிலாளர்களின் பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுக்க இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கடந்த வெள்ளிக்கிழமை (15) ஆம் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக கடற்தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு திமுக, காங்கிரஸின் பாவங்களே காரணம் என மோடி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் படும் இன்னல்களுக்கு திமுக செய்த ‘பாவமே காரணம்’ என பிரதமர் மோடி சமீபத்தில் கூறியதற்கு, கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிய முற்படும் வகையில், முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.
கச்ச தீவு
இலங்கையில் தமிழக கடற்தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் கைதுகளைத் தடுக்க அவரது அரசு என்ன செய்தது என்று கேள்வி கேட்டால், தன்னை விஸ்வகுரு என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர், மௌனகுருவாகி விடுகிறார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் மு.கருணாநிதி தலைமையிலான அப்போதைய மாகாண அரசின் எதிர்ப்பையும் மீறி கச்ச தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதை தமிழக மக்கள் அறிவார்கள் என்று ஸ்டாலின் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் “ஒரு மாகாண அரசு நாட்டின் ஒரு பகுதியை இன்னொரு நாட்டிடம் ஒப்படைக்க முடியும் என்று நம்பும் அளவுக்கு பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா?” என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக கடற்தொழிலாளர்கள்
கச்ச தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், தமிழக கடற்தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படுவதை மத்திய அரசு ஏன் தடுக்கவில்லை, அவர்கள் இந்தியர்கள் இல்லையா?” என்றும் தொடர்ந்தும் கேள்வி எழுப்பினார்.
“படகுகள் கைப்பற்றப்பட்டு தேசியமயமாக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவிக்கிறது. இதை ஏன் இந்திய அரசு அதிகாரப்பூர்வமாகவும் பகிரங்கமாகவும் கண்டிக்கவில்லை? இதற்கெல்லாம் பதில் இல்லை. தன்னை விஸ்வ குரு என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் ஏன் மௌன குருவாக இருக்கிறார்? என்று அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |