இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் மோடியிடம் கோரிக்கை முன்வைத்த ஸ்டாலின்
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், அரசியல் உரிமையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக இந்திய பிரதமர் மோடியிடம் முன்வைத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமருடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தற்போது நடந்து வரும் அசாதாரண சூழ்நிலையை நாம் அறிவோம். பொருளாதார நெருக்கடியில் சிக்கி வேதனையில் தவித்துக்கொண்டிருக்கக்கூடிய இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
தேவையான அத்தியாவசிய பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் அவர்களுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் நான் முன்வைத்துள்ளேன்.
அத்துடன் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், அரசியல் உரிமையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளேன். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை குறித்தும் வலியுறுத்தியுள்ளேன்.
கச்சதீவு மீட்பு குறித்தும் கோரிக்கை வைத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.
