தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறை - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் கண்டனம்
இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அரசின் அடக்குமுறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 47வது அமர்வு நேற்று (21) ஜெனீவாவில் ஆரம்பமானது. இதில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர்,மேற்கண்ட கண்டனத்தை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் நட்டஈட்டுக்கான அலுவலகம் என்பவற்றுக்கான புதிய நியமனங்கள் வருத்தமளிக்கின்றன. மேலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக யுத்த காலத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தமிழ் மக்களுக்கு அனுமதிக்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அவர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் தொடர்பாடல்களை மேற்கொண்டு, இந்நிலைமைகள் குறித்த முன்னேற்றத்தை செப்ரெம்பர் மாத அமர்வில் வைத்து அறிவிக்கவிருப்பதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸாரின் தடுப்பில் இருக்கும் கைதிகள் உயிரிழக்கின்ற சம்பவங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.