அரச நிறுவனங்களில் உள்ள சொகுசு வாகனங்கள் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு
அனைத்து அரச நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படும் சொகுசு வாகனங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தி அவற்றை விற்பனை மூலம் அப்புறப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்துள்ளார்.
இன்று(03) அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, 1800 CC (பெட்ரோல்) மற்றும் 2300cc (டீசல்) க்கு அதிகமான அதி சொகுசு வாகனங்கள், அதிக செலவு செய்து பராமரிப்பு தேவைப்படும் வாகனங்கள் இவ்வாறு அப்புறப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவிப்பு
அமைச்சுக்கள் தொடர்பான பல்வேறு திணைக்களங்கள் மற்றும் செயற்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் கண்டறியுமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்குமாறு அமைச்சின் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் வாகனங்கள் தொடர்பில் தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாகன இறக்குமதியில் தாக்கம் செலுத்துமா
இந்த தீர்மானம் வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் முடிவோடு எந்த வகையிலும் தொடர்புடையது அல்ல என்றும், செயல்முறை அல்லது நாட்டின் அந்நிய செலாவணி மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் தெளிவுபடுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |