சம்பூர் சம்பவத்திற்கு எதிரான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கண்டன அறிக்கை
சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதற்காக சிங்கள காவல்துறையினர் செய்த செயலை கண்டித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
“தற்போது தமிழ்மக்கள் முள்ளிவாய்க்கால் வாரத்தை கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கி, நினைவு கூருகிறார்கள்.
இது தமது இழந்த உறவுகளை நினைவு கூரும் செயல் மட்டுமல்ல,உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் கடந்து வந்த பேரவலத்தை. இவற்றின் மத்தியிலும் உயிர் பிழைத்த அதிசயத்தை மீட்டுப் பார்க்கும் ஒரு நிகழ்வாகவும் உள்ளது.
சிறிலங்கா காவல்துறையினர்
இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதற்காக மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் (கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40). நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள கலைப்பிரிவு மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22) சிங்கள காவல்துறையினரால் இரவு வீடு புகுந்து துன்புறுத்தி கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
சிறிலங்கா காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மேலும் இது தொடர்பில் பெண்கள்அமைப்புகள் தமது கண்டனத்தை தெரிவித்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றோம்.
மேலும் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை சர்வதேச நாட்டுத் தூதுவர்கள் உணர்ந்து சிறிலங்காவிற்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |