பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இலங்கையில் (Sri Lanka) தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, கற்பிட்டியில் (Kalpitiya) இருந்து கொழும்பு (Colombo), காலி (Galle), ஹம்பாந்தோட்டை (Hambantota) ஊடாக பொத்துவில் (Pottuvil) வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலைகளின் உயரம் 2.5 முதல் 3.0 ஆக அதிகரிக்கக்கூடுமெனவும் அலையின் கால அளவு 12 முதல் 16 வினாடிகள் வரை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான அறிவுறுத்தல்
அத்துடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை (Matara) வரையில் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனால், கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகம் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |