P2P போராட்டம்- ஸ்ரீலங்கா அரசின் தொடர் விசாரணைக்குள் தமிழ்த்தேசிய கட்சி பிரமுகர்கள்- மௌனம்காக்கும் சார்வதேச நாடுகள்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த்தேசி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள், ஸ்ரீலங்கா குற்றப்புலனாய்வு பொலிஸாரால் தொடர்ச்சியாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை தொடபாக அமெரிக்கா இந்தியா போன்ற சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கம் மீது கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜெனீவா அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் இன அழிப்பு விசாரணையை நடத்துமாறு கூறியும் இந்த நடைபவணி போராட்டம் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களால் கடந்த வாரம் நடத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே இந்த போராட்டத்தை நடத்தவிடாது தடுப்பதற்காக நீதிமன்ற தடையுத்தரவு மூலம் ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.ஆனால் தடைகளையும் மீறி தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரமுகர்கள் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.
ஆனால் விசாரணையை நிறுத்த வேண்டும் என்று கொழும்பிலுள்ள சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் இதுவரையும் எதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கவில்லை என்ற சந்தேகங்கள், கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன. அகிம்சை வழியில் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்ட இந்த போராட்டம் தொடர்பாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்கிவில்லையென அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் ஏலவே சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறித்து தூதுவர் எதுவுமே தெரிவிக்கவில்லை .இந்தோ-பசுபிக் பிராந்தி பாதுகாப்பு விடயங்களில் ஸ்ரீலங்காவைத் தங்கள் பக்கம் எடுப்பதற்காக அமெரிக்க இந்திய அரசுகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தோடு நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்கின்றன. அதன் காரணத்தினாலேயே ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விடயங்களில் ஆழமான கண்டனங்களை வெளியிடுவதில்லையென அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஜெனிவா மனித உரிமை சபையில், ஈழத்தமிழ்ர் விவகாரத்தை சர்வதேச நாடுகள் கையாளும் அணுகு முறை கூட ஸ்ரீலங்காவைத் தங்கள் பக்கம் வைத்திருப்தற்கான உத்தியே என்றும் சுட்டிக்காட்டுகின்ற விமசகர்கள், ஈழத்தமிழர் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் நேர்மையாக செயற்படுவதில்லையெனவும் கூறுகின்றனர். அப்படி நேர்மையாக செயற்படுவதாக இருந்திருந்தால், தமிழ்த் தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றமை தொடர்பாக பலத்த கண்டனங்களை சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் வெளியிட்டிருப்பர்.
இவர்கள் மௌனமாக இருப்பது இலங்கை அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள விரும்பவில்லையென்பதையே எடுத்துக்காட்டுவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.