யாழ். மருத்துவ பீடத்தில் அனுமதி இன்றி நுழைந்த மாணவியால் வெடித்த சர்ச்சை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக (University of jaffna) மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது, மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவபீடத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்ப்பில் தெரியவருவதாவது, கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது.
பல்கலை அனுமதி பெறாத யுவதி
அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர், புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு, விடுதியில் தங்கியிருந்து, மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர்.
அதன் போதே , 202 மாணவர்கள் காணப்பட வேண்டிய நிலையில், 203 மாணவர்கள் காணப்பட்டமையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத யுவதி ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் கலந்து கொண்டமை தெரிய வந்துள்ளது.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு
இது தொடர்பில் மருத்துவபீடத்தினர் தெரிவிக்கையில், மாணவிகள் மத்தியில் உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை பெற்ற கண்டியை சேர்ந்த யுவதியும் மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து, விரிவுரைகளுக்கு வந்து சென்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |