மாணவி கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டு 29 ஆண்டுகள்... யாழில் இடம்பெற்ற நினைவேந்தல்
யாழில் (Jaffna) இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (07.09.2025) ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் - நல்லூர் செம்மணி வளைவில் இடம்பெற்றுள்ளது.
1996 ஆம் ஆண்டு செம்மணி முகாமில் நிலை கொண்டிருந்த படையினரால் கைது செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசாமி கூட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் செப்டெம்பர் 7ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
இராணுவத்தினருக்கு மரண தண்டனை
அவரை தேடிச் சென்ற தாய், தம்பி, அயலவரும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.
இது தொடர்பான வழக்கில் 6 இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இந்த வழக்கில் இராணுவ உயரதிகாரிகள் பலர் தப்பிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு இன்றளவும் உள்ளது.
வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செம்மணி சந்திப் பகுதியில் காலை 9.30 மணிக்கு நடந்தது.
படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தியின் இந்த அஞ்சலி நிகழ்வில் கிருசாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன், உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் "வாசலிலே கிருசாந்தி" எனும் செம்மொழி தொடர்பான கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
மேலும் இந்த நினைவேந்தலில் தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







