பசிலுக்கு சொந்தமான வீட்டிற்குள் நுழைந்து போராட்டம்! அநுர தரப்பின் வாக்குறுதியை நினைவு படுத்திய மாணவர்கள்
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கருதப்படும் மல்வானையில் உள்ள வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்று முன்னெக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர் சங்கம் இன்று (14) முன்னெடுத்துள்ளது.
கம்பஹா - மல்வானை பகுதியில் அமைந்துள்ள குறித்த வீடு முன்னதாக பசிலிற்கு உரிமையற்றதாக தமது சட்டத்தரணிகள் மூலம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீடும், அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்பும் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் ஒதுக்கப்பட வேண்டும் என கோரி குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டப் பிரச்சினைகள்
பசிலின் கருத்துக்களை சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த வீடும் நிலப்பரப்பும் ஏலம் விடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், முன்னர் நடைபெற்ற போராட்டம் ஒன்றின் போது ஒரு குழுவினரால் வீட்டின் ஒரு பகுதிக்கு தீ வைக்கப்பட்டதால் சேதம் ஏற்பட்டிருந்தது.
சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகம், உரிமையாளர் தொடர்பான சட்டப் பிரச்சினைகள் காரணமாக நீதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
பின்னர், அந்த வளாகத்தில் சர்வதேச நடுவர் ஆய்வு மற்றும் பயிற்சி மையம் ஒன்றை அமைக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அடிப்படை வசதிகள் இல்லாமை
இந்த நிலையில், மக்களிடமிருந்து திருடப்பட்ட சொத்துகளை மீண்டும் மக்களிடமே ஒப்படைப்போம் என்ற தற்போதைய அரசின் தேர்தல் வாக்குறுதியை நினைவூட்டும் வகையில் தற்போது இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறைந்த இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் பல்கலைக்கழகங்களுக்காகவும், பொதுப் பயன்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும் இந்தச் சொத்து பயன்படுத்தப்பட வேண்டும் என இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பயன்பாடின்றி இருக்கும் இந்தச் சொத்தினை கல்வி மற்றும் பொதுநல நோக்கங்களுக்காக ஒதுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் சங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |