எழுத்துப்பரீட்சையின்றி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானம்: அறிமுகமான புதிய முறைமை
போக்குவரத்து திணைக்களத்தினால் நடத்தப்படும் எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றாமலேயே சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான நடைமுறைப் பரீட்சைக்குத் தோற்ற தகுதியுடையவர்களாக சேர்க்கப்படக்கூடிய புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அதன்படி, பாடசாலை வீதி பாதுகாப்பு சங்கத்தினால் வழங்கப்படும் சாரதி திறன் பதக்கத்தைப் பெறும் ஒவ்வொரு க.பொ.த உயர்தர மாணவர்களும் போக்குவரத்து திணைக்களத்தினால் நடத்தப்படும் எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றாமலேயே சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான நடைமுறைப் பரீட்சைக்குத் தகுதியுடையவர்களாக சேர்க்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய பாடசாலைகளில் வீதிப் பாதுகாப்பு மன்றங்களை அமைத்து பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று முதல் (03) நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிக புள்ளிகள்
இதில் ஆரம்பநிலை முதல் உயர்நிலை வரையிலான மாணவர்கள் பங்குபற்ற வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்யப்படும் போது, தெரிவுசெய்யப்பட்ட ஏனைய மாணவர்களைக் காட்டிலும் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதிபெறும் போது சிறிலங்கா அதிபரினால் வழங்கப்படும் இந்த பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு அதிக புள்ளிகளை வழங்குவதற்கான அமைப்பையும் இந்த மன்றங்கள் அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றறிக்கை
பாடசாலை மற்றும் பிரதேச மட்ட உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் இந்தப் பதக்கங்களை வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி அமைச்சரால் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |