சீன தடுப்பூசியை ஏற்றிய புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களும் திடீர் சுகவீனம்
சீனத்தயாரிப்பான சைனோபார்ம் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலுள்ள கைராமணி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 25 ற்கும் மேற்பட்டவர்களுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஊடாக அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கடந்த மாதம் 17ஆம் திகதி இனம் காணப்பட்ட நிலையில், ஆடைத்தொழிற்சாலை ஒருமாத காலமாக மூடப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 1200 ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக சீனத்தயாரிப்பான சைனோபார்ம் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது. இந்த நிலையிலேயே கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 25 ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுகவீனம் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி ஏற்றப்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றியமையினால் சுகயீனமடைந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சியிலுள்ள 2 ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதையடுத்து அவர்கள் நேற்றைய தினம் திடீர் சுகயீனமடைந்திருந்தனர்.
64 ஊழியர்கள் சுகயீனமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது