கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு...! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு
🛑 புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஸ்வர பண்டாரவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் ஜூலை மாதம் எட்டாம் திகதி வரை அவரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01-07-2026) காலை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் பாசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பிணை விண்ணப்பம்
அத்துடன் சுகீஸ்வர பண்டாரவின் பிணை விண்ணப்பம் மீதான கட்டளையையும் நீதவான் ஜூலை எட்டாம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்றைய நீதிமன்ற விசாரணைகளின் போது இந்த விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேஷ விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்தும் ஒரு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரச நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக இரண்டு மாதாந்த சம்பளங்களைப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🛑 முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01-07-2026) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள்
ஒரே நேரத்தில் இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக மாதாந்த சம்பளம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசேட விசாரணைக்காக சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், அந்த விளக்கமறியல் காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையிலேயே நீதிமன்றத்தில் மீண்டும் முன்னலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |