மத்திய ஆபிரிக்க நாட்டில் தற்கொலைப்படை தாக்குதல் : 6 பேர் உடல் சிதறி பலி
மத்திய ஆபிரிக்க நாட்டில் மதுபான விடுதியில் தற்கொலைப்படை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றில் நத்தார் தின கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது தற்கொலைப்படை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மதுபான விடுதிக்குள் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்திருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் நுழைய முயன்றார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை நுழைவாயிலில் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் தற்கொலைப்படை பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
மேலும் இந்த குண்டு வெடிப்பில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர். 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.