சம்பந்தனின் கதிரைக்கு இலக்கு வைக்கிறார் சுமந்திரன் : பகிரங்கமாக குற்றச்சாட்டு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் பதவி விலக வேண்டும் என பொது வெளியில் கோருவது நாகரிகமான அரசியல் பண்பு அல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தலைமைக் கதிரையை
சம்பந்தன் வயோதிபம் காரணமாகவோ நாடாளுமன்ற உறுப்பினருக்கான பணியை மேற்கொள்ள முடியாதவராகவோ இருப்பாராயின் அவரை விடுவித்துவிட்டு புதிய ஒருவருக்கு வாய்ப்பு வழங்குவதென்பது கட்சியின் உள்விவகாரம்.
ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் அரசியல் கொள்கை நிலை, கட்சி யாப்பு விதிமுறை, ஒழுக்கக் கட்டப்பாடுகள் என பல்வோறு அம்சங்களை உள்ளடக்கியே இருக்கும்.
அந்தக்கட்சியின் உள்விவகாரங்களை கட்சிக்குள்ளேயே பேசி ஒரு தீர்மானத்தை பெற்று அல்லது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து அங்கேயே அக்கட்சியின் தலைமை பொறுப்பு அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் மாற்றம் தொடர்பாக முடிவை பேசிக்கொள்ள வேண்டும், அதுதான் ஜனநாயக மரபு.

அதை விடுத்து கட்சியின் உள்விவகாரங்களை ஊடகங்கள் முன்னிலையில் பொதுவெளியில் பகிரங்கமாக வெளிக்கொண்டுவருவது என்ன நோக்கத்தின் அடிப்படையில் என்பது தெளிவாகவே புலப்படுகின்றது.
இரா சம்பந்தன் ஐயாவின் தலைமைக் கதிரையை இலக்கு வைத்தே சுமந்திரன் பொதுவெளியில் பேசியிருக்கின்றார் என்றே தோன்றுகின்றது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.