சுமந்திரன் புரட்டுப் பேச்சு! கடும் சீற்றத்தில் டக்ளஸ்
கடலுணவு உண்பது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் ஏதும் இன்றி, உண்மையை பொய்யாகவும் - பொய்யை உண்மையாகவும் புரட்டிப் புரட்டி போடுகின்ற தொழில் திறனின் அடிப்படையில் பொறுப்பற்ற கருத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில் "கடலுணவுகளை உட்கொள்தற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை" என்ற கடற்றொழில் அமைச்சரின் கருத்து பொறுப்பற்றது" என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனினால் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறித்தவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்கும் எனக்கும் எதிரான கருத்தை தெரிவிக்க வேண்டும் என்கின்ற அரசியல் நோக்கத்துடன் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அவல் என்று நினைத்து உரலை இடித்திருக்கிறார்.
அதாவது கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்ட கடல் பிரதேசங்களிலேயே பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
அவ்வாறான சூழலில் நாடளாவிய ரீதியில் கடலுணவு உட்கொள்வதை மக்கள் தவிர்ப்பார்களாயின், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற பல்லாயிரக்கணக்கான மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கரிசனை பட்டதாக தெரியவில்லை.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், சுயநலன்களுக்காகவும் வடக்கு மாகாண சபை ஆட்சியை வீணாக்கியவர்கள், கிழக்கு மாகாண சபையை தாரை வார்த்துக் கொடுத்தவர்கள், ரணில் மைத்திரி ஆட்சியில் கிடைத்த வாய்ப்பை அலரி மாளிகைக்குள் அடகு வைத்தவர்கள் - கடற்றொழிலாளர்கள் தொடர்பாக அக்கறையோடு செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறனவர்களின் கடந்த கால போலித் தேசிய செயற்பாடுகளும், தீர்க்க தரிசனமற்ற குறுகிய சிந்தனைகளும், அரசியல் அனுபவமற்ற சிறுபிள்ளைத் தனங்களையும் அதிகாரங்களை பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும் என்ற கொள்கைகள் அற்ற வியாபார சிறுமைகளுக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது என்பதை எதிர்காலத்திலாவது சுமந்திரன் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.