அதிபர், பிரதமராவதற்கு சுமந்திரனுக்கு கிடைத்த வாய்ப்பு - ரணிலும் உடன்பாடு
அதிபர் தேர்தலில் தமிழ் வேட்பாளர்
கடந்த அதிபர் தேர்தலில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வேட்பாளர் நிறுத்தி இருந்தால் உலக நாடுகளுக்கு ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தினைக் கூறினார்.
தமிழர் ஒருவரை அதிபர் வேட்பாளராக நிறுத்தினால் அவரை பெரும்பான்மை ஏற்றுக்கொள்ளாது என்பதனை இதன்மூம் உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தியிருக்கலாம் என அவர் கூறினார்.
தமிழ் பிரதிநிதி ஒருவர் கேட்டிருந்தால்
குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸ்ஸநாயக்காவுக்கு மூன்று வாக்குகள் வருவதற்கு பதிலாக, தமிழ் பிரதிநிதி ஒருவர் கேட்டிருந்தால் குறைந்தது 10 வாக்குகளுக்கு மேல் கிடைத்திருக்கும் என அவர் கூறினார்.
அத்தோடு மே 9 காலப்பகுதியில் நடந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நடக்கவிருக்கின்ற அதிபர் தேர்தலில் அநுர, சஜித், சுமந்திரன் ஆகியோரே அதிபர் வேட்பாளர்களாக வரலாம் என டிலான் பெரேரா பலமுறை கூறினார். அந்தக் கலந்துரையாடலில் தற்போதைய அதிபரான ரணிலும் இருந்தார்.
மூவரில் யாரையாவது ஒருவரை ஏகமனதாக தெரிவு செய்யலாம் என அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
விருப்பத்தெரிவு சுமந்திரனே
அதிலும் தனது விருப்பத்தெரிவு சுமந்திரன் தான் என டிலான் பெரேரா கூறியதாக சுமந்திரன் கூறினார். துமிந்த திசாநாயக்காவும் இதற்கு ஆதரவு தெரிவித்து பல இடங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்.
அத்தோடு அநுரகுமார திஸ்ஸநாயக்கா, தனது பிரதமர் வேட்பாளராக வர முடியுமா என தன்னிடம் கேட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.
