துணை மருத்துவ சேவை தொழிற்சங்கங்கள் - அடையாள வேலை நிறுத்த போராட்டம்
துணை மருத்துவ சேவையின் ஐந்து தொழிற்சங்கங்களுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் நாளை(24) 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம, இத்தொழிற்சங்க போராட்டம் நாளை காலை 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை(25) காலை 8.00 மணி வரை அமுலில் இருக்கும் என்றார்.
ஒருநாள் தொழிற்சங்க நடவடிக்கை

இதன்படி, 07 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானிகள், மருந்தாளுனர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் தொழில்சார் சிகிச்சை நிபுணர்கள் என ஐந்து தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த ஒருநாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.
மேலும், இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்ற மருத்துவ ஸ்கேன் மற்றும் பிற ஆய்வக சேவைகள் மற்றும் மருந்து விநியோகம் தடைபடும் என பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.