சுரேஸ் சலேவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் காவலில் உள்ள பிற சந்தேக நபர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தை மே 20 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், சுரேஷ் சலே இன்று (22) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கொழும்பு கோட்டை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து சுரேஷ் சலே மற்றும் ஏனைய இரு சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
90 நாட்கள் தடுப்புக்காவல்
சந்தேகநபரான சுரேஷ் சலே தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கின் ஏனைய இரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுரேஷ் சலே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள போதிலும், நீதித்துறை நடவடிக்கைகளுக்காக அவர் பகிரங்க நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் என்று கடந்த வழக்கு விசாரணையின் போது நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவின்படி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |