ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கத்தினர் மீதான தாக்குதல் தவறானது : கண்டனம் வெளியிட்டுள்ள சுசில் பிரேமஜயந்த
கொழும்பில் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கத்தினரால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது வீணாக நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் காரணமாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட தரப்பினர் அசௌகரியத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சங்கத்தினரை எதிர்வரும் வாரம் தாம் தனிப்பட்ட ரீதியில் சந்தித்து, பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கம்
அத்துடன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரச்சனைகள் தொடர்பில் தாம் தொடர்ந்து சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இதில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட கல்வித் துறையில் பணியாற்றுபவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக குறித்த முன்மொழிவுக்கான நிதியை சிறிலங்காவின் திறைசேரி ஒதுக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தொழிற்சங்கங்களுக்கு தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க முழுச்சுதந்திரம் இருப்பதாகவும் அவற்றை பூர்த்தி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமெனவும் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார்.
