கோட்டாபயவால் விரட்டியடிக்கப்பட்டவர் மீண்டும் அமைச்சரவைக்குள்
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சியின் சுயாதீனமான நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படப் போவதாக அறிவித்த சுசில் பிரேமஜயந்தவை தற்போது எவராலும் தேடிப்பிடிக்க முடியவில்லை என தெரியவருகிறது.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க முடிவு செய்த அணி அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையில் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டதுடன் அதன் பின்னர் அவர் பற்றிய எந்த தகவலும் இல்லை எனக் கூறப்படுகிறது.
குறைந்த பட்சம் எடுக்கப்படும் தொலைபேசி அழைப்புகளுக்கும் அவர் பதிலளிப்பதில்லை என பேசப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி பதவியேற்க உள்ள அமைச்சரவையில் சுசில் பிரேமஜயந்தவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.
அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சித்ததன் காரணமாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்தவை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்.
இதன் பின்னர் தான் சுயாதீனமான நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட போவதாக அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
