சந்தேக நபர் உயிரிழப்பு : கொபேய்கனே காவல் நிலையத்தில் மூவருக்கு பணியிடை நீக்கம்
காவல்துறை காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொபேய்கனே காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவல்துறை சார்ஜன்ட்களும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடமை தவறியமைக்காகவே அவர்கள் இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
கொபேய்கனே, பெத்தேகம பகுதியில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபர் ஒருவர் கடந்த 25ஆம் திகதி பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு கொபேய்கனே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
காவல்துறையினர் கைது
இரண்டு நாட்கள் காவல்துறை காவலில் இருந்த நிலையில் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 27 ஆம் திகதி குறித்த சந்தேக நபர் உயிரிழந்தார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து, சந்தேக நபரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஐந்து உள்ளூர் மக்களை கொபேய்கனே காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில், சந்தேக நபரைப் பிடித்து மரத்தில் கட்டிய ஒரு மணி நேரத்திற்குள்ளேயே நாங்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததுடன் அவர் எந்தவித காயமும் இன்றி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதி
மேலும், சந்தேக நபர் கிராம மக்களால் தாக்கப்பட்டிருந்தால், அவர் இறப்பதற்கு முன்பே அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இறந்த நபர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக ஏற்கனவே பலமுறை காவல்துறையினரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்ததது.
அவ்வாறு முறைப்பாடு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், சந்தேக நபரைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காவல்துறையினரே எங்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்” என தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |