கைது செய்யச் சென்ற பொலிஸார் இருவரைத் தாக்கிய சந்தேக நபர்!
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிஸார் இருவர் மீது குறித்த நபர் தாக்குதல் நடத்தியதால் இரு பொலிஸார் வண்ணாத்தவில்லு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்தவில்லு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் காண்ஸ்டபிள் இருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வண்ணாத்துவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 14ஆம் கட்டைப் பிரதேசத்தில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொலிஸ் காண்ஸ்டபிள் இருவரும் சிறிய காயங்களுக்குள்ளாகி வண்ணாத்துவில்லு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் காண்ஸ்டபிள் இருவரையும் தாக்கியதாக கூறப்படும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.