இலங்கை வந்த ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: சந்தேகநபர் கைது
பேருந்தில் பயணித்த இங்கிலாந்து (England) பெண் ஒருவரின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு (Colombo) - களனி பெத்தியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யூடியூப் பக்கமொன்றை நடத்தி வரும் ஸ்கை மெக்கோவன் என்பவர் கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
பயணப்பைத் திருடப்பட்டுள்ளது
இந்நிலையில், புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில்பேருந்தில் வைத்து இவரது பயணப்பைத் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில், சந்தேக நபர் திருடிச் சென்றதாகக் கூறப்படும் 20 ஆயிரம் டொலர் பெறுமதியான மடிக்கணினி, கமரா, வங்கி அட்டைகள் மற்றும் விமான கடவுச்சீட்டு உள்ளிட்ட பொருட்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிசிரிவி கமரா
பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகிய புகைப்படங்கள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரை கைது செய்ய முடிந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருடப்பட்ட கமராவை தொம்பே பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மடிக்கணினியின் கடவுச் சொல்லை அழிப்பதற்காக பேலியகொடை பிரதேசத்தில் நபரொருவருக்கு 5,000 ரூபா முற்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பொருட்கள் சந்தேக நபரிடம் காணப்பட்டதாகவும் புறக்கோட்டை காவல் நிலைய தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |