வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் 'வீட்டுக்கு வீடு' விநியோக முறைமை இடைநிறுத்தம்
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை அனுப்பும் வீட்டுக்கு வீடு (DOOR TO DOOR) முறையை உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் இம்முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன், குறித்த பொருட்கள் தனியார் போக்குவரத்து முகவர் நிலையங்கள் மூலம் நேரடியாக குறித்த நபர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
எனினும், பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் மற்றும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, இந்த விநியோக முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
எவ்வாறாயினும், டிசம்பர் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களை இலங்கை சுங்கத்தின் சாதாரண முறையின் மூலம் இலங்கைக்கு அனுப்ப முடியும்.
மேலும், கடந்த மூன்று நாட்களில், DOOR TO DOOR மூலம் பொருட்கள் மற்றும் சேவை விநியோக முறையின் மூலம் சுமார் 20 கிலோகிராம் போதைப்பொருள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சுங்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதேவேளை வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களினால் தற்போது போதைப்பொருள் விநியோகம் இந்த முறையின் ஊடாக இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் முறையான சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு உட்பட்டு அடுத்த வருடம் மீண்டும் குறித்த முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |