பொருளாதாரத்தை தொடர்ந்து நீதித்துறையினை சீர்குலைக்கும் அரசாங்கம் : ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்
மக்கள் எழுச்சியின் பின்னர் பதவியேற்ற அரசாங்கம் பொருளாதார ரீதியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது அதிகாரத்தினை தக்கவைத்துக்கொள்வதகான முயற்சிகளை எடுத்துவருவதாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதற்காகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் ஆகியவற்றை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
நீதித்துறை சுயாதீனம் மீறல்
“சரியான திட்டமிடல்கள் இல்லாது எடுக்கப்பட்ட தீர்மானங்களால் நாட்டின் பொருளாதாரத்தினை சீர்செய்ய முடியாது சீர்குலைத்துள்ள நிலையில் தற்போது நீதித்துறையையும் சீரழிக்க ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே, அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நீதிபதிகளை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தி அச்சறுத்தலை விடுத்துள்ளதோடு, நாடாளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் ஆகியவற்றின் ஊடாக சுயாதீன நீதித்துறையை கேள்விக்குட்படுத்தி வருகின்றது.
இவ்வாறான நிலையில், தற்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பணியாற்றிய நீதிபதி தனக்கு உயிரச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டு நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.
ஆகவே அவரின் வெளியேற்றம் சம்பந்தமாகவும், அவருக்கு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களை வழங்கிய தரப்புக்கள் தொடர்பிலும் உண்மையான விடயங்களை கண்டறிவதற்கான வெளிப்படைத்தன்மையான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.” என்றார்.